என் மனத்தின் ரணம்
கற்கண்டாய் கரையவைக்கும் எறும்பாய்
சொற்களை கோர்க்கிறேன்
காதலுடன்
உன் மனமும் கரையுமென்று
ராக்கனாக்களை
தூக்கணாங் குருவிக்கூடாய் அழகாக்கிய நீ
வேர்க்க நான் காதல் சொன்னதும்
கூடாய்
நிலைக்காமல் போனது ஏன்
அச்சமின்றி உயிரை
துச்சமென நினைத்து
நச்சுப் பாம்புகளுடன்
வாழ்பவன் உடல் போல்
மறத்துப் போயிருக்கிறது என் இதயம்
சத்தம் போட்டு
கத்தி அழுதுவிட்டு தூங்கும்
தத்தி நடக்கும்
குழந்தையாய் - இன்று
அமைதியாய் என் மனம்
படும் போது தான்
தொடும் போது
சுடும் என்றறியும்
குழந்தையின் விரலாய்
வெந்திருக்கிறது என் இதயம்
தேனாய் இனிப்பாய் என்று
நானாய் நினைத்து
வீணாய் ஆசை வளர்த்து
உன்னால்
ஏமார்ந்தவன் நான்
கவலை மறந்து
குவலய இலையில் நின்று கத்தும்
தவளையாய் - உன்
நினைவுகளோடு பிரியவேண்டும்
என் உயிர்
ஏ. எச். எம். றிழ்வான்