14.4.15

என் விழியின் வலி

என் விழியின் வலி


உன் மேல்
என் பார்வைகள்
பட்டதால்
என் கண்கள்
கண்ணீர்
சொட்டுகின்றன


கண்களால்

வரையப்பட்ட
உன்
விம்பத்தை
கண்ணீர் கொண்டு
அழிக்க வைக்கிறாய்


தண்ணீருக்கு

பஞ்சமாகும்
வரட்சியான
தருணங்களிலும்
என் கண்ணீருக்கு மட்டும்
பஞ்சமில்லை


விரல்கள் கிழியும் வரை

வாசிக்கப்படும் வயலின் போல்
கண்ணீர்த் துளிகள்
சொட்டும் வரை
எழுதப்படுகின்றன
என் கவிதைகள்


உன் காதல் 

வலி தந்த
கண்ணீர்த்துளிகளை
பார்க்க வேண்டுமா
என் கவிதைகளை
படி


உன் காதல்

நிஜமானால்
நான்
சேகரித்துவைத்த
மயிலிறகுகளும்
முளைத்து விடும்


தூக்குக் கயிறு , ஆழ்கடல்

மலையுச்சி
நச்சு போத்தல்
துப்பாக்கி ரவை இவற்றோடு
எப்போது பேசும்
உன் மௌனம்

ஏ. எச். எம். றிழ்வான்


நொறுங்கிய இதயம் ...

நொறுங்கிய இதயம் ...

என் இதயம் என்ன
சேனைப் பயிர்ச் செய்கை நிலமா
காதலை பயிர் செய்த பின்
அப்படியே விட்டுச் செல்ல


வெள்ளத்தில் வெறிச்சோடிய
அறுவடை நிலமாய்
சகதியாகவே இருக்கிறது
இன்று என் மனம்


ஏணி உடைந்த
மரக்குடில் போல இருக்கிறது
என் காதல்
ஏறிய பின் இறங்க முடியாமல்


வெடித்துச் சிதறிய
இலவம் பஞ்சாய்
சிதறிக்கிடக்கிறது என் மனம்
உன் பொய்யான வார்த்தைகளால்


இடையிலே
அறுந்து போனது என் காதல்
பூக்கும் முன் பறிக்கப்படும்
பூவாய்


புத்திமான் பலவான் கதை
பூதமாக மீண்டும் மீண்டும்
ஏமார்ந்து போகிறேன்
உன்னிடத்தில் நான்


தொப்பென்று விழுந்த
பனை மரத்தடி பழமாக
இன்று என் மனசு
வலிகள் நிறைந்து


காளானாய் பூத்து
ஈசல்களாய் பறந்து விட்டது
என் மேல் வைத்த
உன் காதல்


புற்றாகவே இருக்கிறேன்
மீண்டும் நீ வருவாய்
மலர்வாய்
சிறகடிப்பாய் என்று

ஏ. எச். எம். றிழ்வான்

நான் நானாக இருக்கிறேன் ..

நான் நானாக இருக்கிறேன் ..


சுமை தாங்க முடியாத 
ஊமைக் காதலில் - என் 
இமை சிந்திய கண்ணீரை 
மையாக்கி எழுதுகிறேன் 


சத்தமில்லாமல் 
ரத்தமில்லாமல் நடக்கிறது 
யுத்தம் என்னுள் - உன் 
முத்தங்களை நினைக்கும் போது 


தெரியாமல் தொடங்கிய – யாரும் 
அறியாமல் வளர்ந்து இன்று 
பிரிந்து கிடக்கிறது 
புரியாத புதிராய் என் காதல் 


முடித்து வைத்த உன் நினைவுகள் 
வெடித்துச் சிதறிய பின் 
துடிக்க முடியாதென்று வேகமாகவே
அடிக்கிறது என் இதயம் 


கூடி வாழவென்று
நாடி வந்த என்னில் 
தேளாய் கொட்டி 
வேலாய் ஏன் பாய்ந்தாய் 


கனாக்களிலே வந்து – பல
வினாக்களை என்னில் தொடுத்து
காணாமல் போனவள் நீ - இனி
நானாகவே இருக்கிறேன் நான்


ஏ. எச். எம். றிழ்வான்

வெந்து போன என் மனசு ...

வெந்து போன என் மனசு ...

தோப்பினிலே
பூப் பறிக்கும்
பூப்படைந்த பூ உன்னை
யாப்பறிந்து
பாப்புனைந்தேன்

வெள்ளை நிறத்து
முல்லை மலரிலே
கறுப்பு நிறத்தில்
ஒரு வண்டாய் - உன்
கண்கள்

சாலையோர
சோலையிலே
பறித்து வைத்த ரோஜாவாய்
சிரிக்கிறது - உன்
இதழ்கள்

நித்தம் நான் உன்னும்
ஈத்தம் பழத்தோடு
ரவை கொண்டு
சுவையாக செய்த லட்டாய் - உன்
கன்னம்

சாத்திரக் காரனாக்கி - என்னை
காத்திருக்க வைத்திருக்கிறது நான்
பிடித்துவிடத்
துடிக்கின்ற - உன் 
கைகள்


வத்திக் குச்சியால்
பத்தவைத்த ஜோதி போல்
துளிர் விட்டு
ஒளிர்கிறது - உன் 
கம்மல்

நித்திரை கெடுக்கும் - உன்
மாத்திரைக் கண்கள் மேல்
சித்திரை நிலவின் பாதி
முத்திரையாய் - உன்
நெற்றி

பஞ்சமில்லா புன்னகையை
வஞ்சமில்லாது
நெஞ்சுதிர்த்த நீ இன்றதில்
கஞ்சம் செய்து என்னை
கொல்கிறாய்

அந்தர் வந்தால்
சந்து வீட்டில் தொங்கும்
லந்தரில் பட்ட பூச்சாக
வெந்திருக்கிறது - உன்னால்
என் மனசு

ஏ. எச். எம். றிழ்வான்

மருந்தாகும் உன் முத்தம் ...

மருந்தாகும் உன் முத்தம் ...


எதைப் பூசினாலும்
குறையாது உன் முகப்பருக்கள்-அவை
பருக்கள் அல்ல
பதுக்கல்
நீ எனக்குத் தராத முத்தங்கள்


உன் முகப் பூச்சுக்களுக்கு விலை
என் கெஞ்சல்கள் தான்
ஒவ்வொரு கெஞ்சலுக்கும்
ஒவ்வொரு முத்தம் தந்துவிடு
குறைந்து விடும் உன் முகப்பருக்கள்


கண்ணாடியைப் பார்-நீ
தரவேண்டிய முத்தங்கள்
எத்தனை என புரியும்
முத்தங்களை தந்து பார்-உன்
முகப்பருக்கள்
அடையாளமில்லாமல் மறையும்


உன் முகப்பருக்களை
அதிகம் விரும்புகிறேன்
அவை எனக்கு நீ தர வேண்டிய
கடன் என்பதால்


உன் கடன்கள்
அதிகரிப்பதையே விரும்புகிறேன்-நீ
எனக்குத் தரவேண்டிய
முத்தங்களும் அதிகரிப்பதனால்


இனியும் முக அலங்காரத்துக்கு
நேரம் ஒதுக்காதே
முத்தமிட மட்டும் நேரமொதுக்கு
அது உன் முக அலங்காரத்துக்கான நேரம் தான்


நீ அடக்கி வைத்த ஆசை தான்
முகப்பருக்கல்-அது
முகப்பூச்சுக்களால் மறைந்திடாது
உன் முத்தங்கள் தான் மருந்து


என் போர்வைக்குள்-உன்
முத்தங்களை
மொத்தமாக கொண்டு வா-உன்
பருக்கல் மறைந்து விடும்


உன் முத்தங்களின் பதுக்கல் தான்
உன் முகப்பருக்களின் வடுக்கல்

ஏ. எச். எம். றிழ்வான்

என் கல்லறையின் கிறுக்கல் ...


என் கல்லறையின் கிறுக்கல் ...

செத்தல் மிளகாய்
இதழ்களிலே
நச்சுத்தடவியா
முத்தமிட்டாய்


மென் கம்பி
விரல்களிலே
மின் தடவியா-என்னை
தொட்டாய்


துப்பாக்கி ரவை
கண்களாலே
ஏனடி நீ என்னை
சுட்டாய்


நச்சுத் திரவியமா-நீ
என் மீது சிந்திய
பொய்யான 
புன்னகைகள்


கத்திக் கண்களால்
குத்திக் கிழித்தாய்
என்னில்-உன்
நினைவுகளை


என்னைக் கொள்ளும்
ஆயுதங்களை வைத்திருக்கும்
களஞ்சியமா நீயும்-உன்
இதயமும்


காதல் கைதியாய்
சிறைப்பிடித்து
மரணதண்டணை நீ விதித்து
உயிரோடு ஏன் புதைத்தாய்


ஏ. எச். எம். றிழ்வான்

காதலின் வலி ....

காதலின் வலி ....

நானாக நான் இருக்க 
தேனாக மொழி பேசி என்
பேனாவால் கவிதைகளை 
தானாக விதைத்தவள் நீ


பித்தனாய் அலைந்தேன் 
புத்தியை இழந்தேன்
அத்தனையும் பறித்த பின் 
புத்தி நான் தெளிந்தேன் 


இத்தனை நாளாய் எம்மில் 
எத்தனை சில்மிஷங்கள் 
அத்தனையும் மறந்துவிட்டு
மொத்தமாய் நீ மாறிவிட்டாய் 


தென்றலாய் தீண்டி விட்டு
புயலாய் தாக்குகிறாய் 
நிழலாய் இருந்து விட்டு
தழலாய் சுடுகின்றாய் 


ஈரமாய் பேசிய நீ
பாரமாய் மாறியதேன் 
தாரமாய் நினைத்திருந்தேன்
தூரமாய் சென்றுவிட்டாய் 


அழகில்லாதவன் - என்னை
அழகாக்கியது உன் காதல் ஏன்
விலகுகிறாய் 
பழகிய நினைவுகளை மறந்தவளாய்


கனியாத உன் காதல் - யானையுண்ட 
கனியாகவே இருக்கிறது
போலிகளால் புனையப்பட்டு
வலிகளால் நிரம்பியதாய் 


சுடாத பாத்திரமாய் 
விடாது கசிகிறது என் 
கண்களில் 
கண்ணீர் உன்னையே நினைத்து


ஏ. எச். எம். றிழ்வான்

காத்திருக்கிறேன் காதலுடன் ...

காத்திருக்கிறேன் காதலுடன் ...

குட்டிப் பூனையாய்
எட்டு வைக்கிறேன் மெல்ல
எட்டி விடலாமென்று - உன்
அன்பை

கொட்டும் மழையை அறியாது
பட்டம் கட்டும் சிறுவனாய்
பூட்டி வைக்கிறேன்-உன்
நினைவுகளை

விட்டுப் போனபின்
ஒட்டுப் போட வைத்திருக்கும்
பட்டு வேட்டியாய்-என்
இதயம்

கட்டுக் கட்டாய்
வெட்டி வைத்திருக்கும் கரும்பில்
சொட்டும் வெல்லமாய்-என்
உயிர்

எட்டாத தூரத்திலே
வட்டமிட்டு சுற்றித்திரிந்து
நோட்டமிடுகின்றேன் பருந்தாய்-நான்
உன்னை



தட்டு நிறைய குங்குமத்தோடு
வட்டப் பொட்டு வைத்து
மெட்டியிட காத்திருக்கிறேன்-என்
உண்மைக் காதலுடன்

ஏ. எச். எம். றிழ்வான்

என் உள்ளத்தில் முள் தைத்தவள் நீ

என் உள்ளத்தில் முள் தைத்தவள் நீ

தள்ளித் தள்ளி சென்றாலும்
மெல்ல மெல்லமாய் என் மனதை
கிள்ளி எடுத்த
கள்ளி நீ

உள்ளத்திலே
கள்ளம் கொண்டு
குள்ளமாய் நீ பழகி
இல்லை இனி காதல் என்றாய்

வில்லத்தனத்தை
உள்ளே வைத்து
கல்லான உன் மனதால்
தொல்லை கொடுத்தவள் நீ

ஒல்லியான உன்னிடத்தில்
தள்ளியே நிற்கின்றேன்-என் காதலுக்கு
புள்ளி வைத்து உயிரோடு
கொள்ளி வைத்ததனால்

பள்ளம் பாயும்
வெள்ளத்தில் ஓடும்
வள்ளமாய்-இன்று என்
உள்ளம்

ஏ. எச். எம். றிழ்வான்