காதலின் வலி ....
தேனாக மொழி பேசி என்
பேனாவால் கவிதைகளை
தானாக விதைத்தவள் நீ
பித்தனாய் அலைந்தேன்
புத்தியை இழந்தேன்
அத்தனையும் பறித்த பின்
புத்தி நான் தெளிந்தேன்
இத்தனை நாளாய் எம்மில்
எத்தனை சில்மிஷங்கள்
அத்தனையும் மறந்துவிட்டு
மொத்தமாய் நீ மாறிவிட்டாய்
தென்றலாய் தீண்டி விட்டு
புயலாய் தாக்குகிறாய்
நிழலாய் இருந்து விட்டு
தழலாய் சுடுகின்றாய்
ஈரமாய் பேசிய நீ
பாரமாய் மாறியதேன்
தாரமாய் நினைத்திருந்தேன்
தூரமாய் சென்றுவிட்டாய்
அழகில்லாதவன் - என்னை
அழகாக்கியது உன் காதல் ஏன்
விலகுகிறாய்
பழகிய நினைவுகளை மறந்தவளாய்
கனியாத உன் காதல் - யானையுண்ட
கனியாகவே இருக்கிறது
போலிகளால் புனையப்பட்டு
வலிகளால் நிரம்பியதாய்
சுடாத பாத்திரமாய்
விடாது கசிகிறது என்
கண்களில்
கண்ணீர் உன்னையே நினைத்து
ஏ. எச். எம். றிழ்வான்