14.4.15

நொறுங்கிய இதயம் ...

நொறுங்கிய இதயம் ...

என் இதயம் என்ன
சேனைப் பயிர்ச் செய்கை நிலமா
காதலை பயிர் செய்த பின்
அப்படியே விட்டுச் செல்ல


வெள்ளத்தில் வெறிச்சோடிய
அறுவடை நிலமாய்
சகதியாகவே இருக்கிறது
இன்று என் மனம்


ஏணி உடைந்த
மரக்குடில் போல இருக்கிறது
என் காதல்
ஏறிய பின் இறங்க முடியாமல்


வெடித்துச் சிதறிய
இலவம் பஞ்சாய்
சிதறிக்கிடக்கிறது என் மனம்
உன் பொய்யான வார்த்தைகளால்


இடையிலே
அறுந்து போனது என் காதல்
பூக்கும் முன் பறிக்கப்படும்
பூவாய்


புத்திமான் பலவான் கதை
பூதமாக மீண்டும் மீண்டும்
ஏமார்ந்து போகிறேன்
உன்னிடத்தில் நான்


தொப்பென்று விழுந்த
பனை மரத்தடி பழமாக
இன்று என் மனசு
வலிகள் நிறைந்து


காளானாய் பூத்து
ஈசல்களாய் பறந்து விட்டது
என் மேல் வைத்த
உன் காதல்


புற்றாகவே இருக்கிறேன்
மீண்டும் நீ வருவாய்
மலர்வாய்
சிறகடிப்பாய் என்று

ஏ. எச். எம். றிழ்வான்