15.4.15

உன்னுள் என் காதல்

உன்னுள் என் காதல்

வாடகை
செலுத்தாமலே
குடியிருக்கிறாய்
நீ
என் இதயத்தில்

உன்னை எழுதிய
என் கவிதைகள்
இன்னும் விதைகள் தான்
பொறுமையாக காத்திருக்கிறேன்
முளைக்கும் வரை

வானில்
நடமாடும்
நட்சத்திரமா நீ
திடீரென
மறைந்து விடுகிறாய்

சக்கரை நோய் போல
கூடிக் குறைந்தாலும்
நிரந்தரமாகவே
இருக்கிறது
உன் நினைவு


என் நினைவுகள்
உன் தூக்கத்தை கெடுத்தால்
என் கவிதைகளை படி
அதில் உன் நினைவுகள் மட்டுமே
இருக்கின்றன

உன் தலையணைக்கு
பக்கத்தில்
ஓர் இடம் தா
என் கவிதை புத்தகமும்
உன்னோடு தூங்கட்டும்

காதல்
என்னுள் பாசமாக
உன்னுள் வேசமாக
என்னுள் நேசமாக
உன்னுள் ?...........


ஏ. எச். எம். றிழ்வான்



கவிதைக்குள் ஒழிந்த கவிதை


கவிதைக்குள் ஒழிந்த கவிதை


என்
சுழற்சியும்
சுற்றுகையும்
உன்னை
முற்றுகையிடத்தான்

உன்
பார்வைகளால் தான்
என்
கவிதைகள்
வேர் விடுகின்றன

உன்னை பிடிக்கும்
தூண்டில் இறையாக
வீசப்படுகின்றன
என் கவிதைகள்
ஒவ்வொன்றும்

காற்று வீசுகிறேன்
வியர்க்கிறது
அவை நீ
சுவாசித்தவை
என்பதால்

குடிசையை
எரிக்கும் என்று தெரிந்தும்
தொங்கவிடப்படுகிறது
விளக்கு
ஓலைக்குடிசையில்

என்
கவிதைகளுக்குள்ளாய்
எட்டிப்பார்க்கிறாய் இன்னும்
அழகாகிறது என்
கவிதைகள்

ஏ. எச். எம். றிழ்வான்

உன் நினைவுகள்

உன் நினைவுகள்

உன் கண்
அசைவுகள் தான்
சாவி கொடுக்கின்றன
என் பேனைகளுக்கு
உன்னைப் பற்றி
கவி எழுத

என் கண்கள்
உன் நினைவுகளை
சேகரிக்கும் நூலகங்கள்
என் கவிதைகள்
உன்னை வாசிக்கும்
உதடுகள்

நிஜமாகவே
என்னை
கட்டியணைக்கிறாய்
உன் நிழல்கள்
என் மேல்
விழும்போது

பாகாகிக்
கொண்டிருக்கும்
என் 
கவிதைகள்
பழுதாகும் முன்
அருந்திச் செல்

இரவு நேரமானதும்
உன்னைப் பற்றி எழுதிய
கவிதைகளை வாசிக்கிறேன்
கட்டியணைத்த படி
என்னோடு
தூங்குகிறாய் நீ

குயில்களிடம்
வாடகைக்கு வாங்கிய
சொற்கள் தான்
உன்னை பற்றி
எழுதிய
என் கவிதைகள்

வண்ணத்துப்
பூச்சிகளிடமிருந்து தான்
வண்ணம் பெறுகிறேன்
என் மதுக்கிண்ணம்
உன்னை
வரைய

என்
கவிதைகள்
ஒரு தேன் கிண்ணம்
உன் நினைவுகளை
பக்குவப்படுத்தி
வைத்திருப்பத்தால்

ஏ. எச். எம். றிழ்வான்

புரியாத புதிர் நீ...


புரியாத புதிர் நீ...


அனுமதி தா
என் கவிதைப்
புத்தகத்துக்கு
உன் பெயரை
வைக்கிறேன்

குகை வாசிகள் போல்
தூக்கம் வேண்டும்
கனவில் இனிமையாக
நீ
முத்தமிடுவதால்

உன்
பார்வைகள் தான்
என்
கவிதைகளுக்கு
மோட்சம்

என் கவிதைகள்
போதை
தருகின்றன
அதில் நீ மட்டுமே
கலந்திருப்பதனால்

பறவைகளோடும்
பேசுவேன் - என்
கவிதைகளின்
அர்த்தம் உனக்கு
புரியும் போது

கல் நெஞ்சக்காரியே
உன் நெஞ்சினிலே
இடம் கொடு
கவிச்சிற்பங்களை
செதுக்குகிறேன்

புதிரே
உனக்கு மட்டும்
ஏன் புரிவதில்லை
என் கவிதைகளின்
அர்த்தம்

எனக்கு
வியர்க்க வேண்டும்
அவசரமாக என்
போர்வைக்குள்
வா

திசை தெரியாது
தவிக்கிறேன்
என்னை
காற்றாய்
கரை சேர்

ஏ. எச். எம். றிழ்வான்

புல்லாங்குழலின் சிரிப்பு

புல்லாங்குழலின் சிரிப்பு


நதிகளை போலவே
என் கவிதைளும்
நம் காதலை
எழுத எழுத
புதிதாகின்றன

பூக்களையும்
பறவைகளையும் அதிகம்
புகைப்படம் எடுக்கிறேன்
உன்னைப் பற்றி
கவி எழுத


என் இதயம் நீ என்பதால்
உன்னைப் பற்றி
கவி எழுதும் போது - என்
நாடிகளும் நாளங்களும்
சற்று ஓய்வெடுக்கின்றன

புதிர்ப் பாதையூடாக
பயணிக்கிறேன்
உன் இதயத்தை
நெருங்கும் பாதையை
அறியாது


உன்னைப் பற்றி
எழுதிய கவிதைகளை படி
நான் கண்ட
கனவுகளை
நீயும் காண்பாய்

வளையாத மூங்கிலில்
துளையிட்ட பின்
புல்லாங் குழல்கள்
வேதனை மறந்து சிரிக்கின்றன
என்னைப் போல்

ஏ. எச். எம். றிழ்வான்

பூவே இதழ்களால் உதிர்

பூவே இதழ்களால் உதிர்


டார்வின் தந்த

பட்டானிக்கடலையுடன்
காத்திருக்கிறேன்
உனக்கு என் மேல்
காதல் வருமானால்
கூர்ப்புக் கொள்கையை
உண்மை என நம்ப

என் இதயத்தில்

பலமாக
ஒரு ஆணி அடித்து
உன் நினைவுகளை
மாட்டி வைத்திருக்கிறேன்
கலன்று விடாமல்
பார்த்துக் கொள்

காந்தியைப் போல்

அரை நிர்வாணமாக இருக்கிறது
என் கவிதை
உன்னிடம்
அகிம்சை மனமிருந்தால்
காதல் ஆடை
போர்த்து

நொடிகள் தான்

உன்னைக் காண்கிறேன்
புன்னகைகிறேன்,பேசுகிறேன்
ஆனால்
என் கவிதைகள்
அதிக நேரம்
உன்னோடு பேசுகின்றன

ஈரமான

உன் உதடுகள்
காயுமுன் சொல்லி விடு
உன் காதலை
நான்
அதை தொட்டுத்தான்
கவிதை எழுதவேண்டும்


ஏ. எச். எம். றிழ்வான்

என் மனத்தின் ரணம்

என் மனத்தின் ரணம்

கற்களை
கற்கண்டாய் கரையவைக்கும் எறும்பாய்
சொற்களை கோர்க்கிறேன்
காதலுடன்
உன் மனமும் கரையுமென்று

ராக்கனாக்களை
தூக்கணாங்  குருவிக்கூடாய் அழகாக்கிய நீ
வேர்க்க நான்  காதல் சொன்னதும்
கூடாய்
நிலைக்காமல் போனது ஏன்

அச்சமின்றி உயிரை 
துச்சமென நினைத்து
நச்சுப் பாம்புகளுடன்
வாழ்பவன் உடல் போல்
மறத்துப் போயிருக்கிறது என் இதயம்


சத்தம் போட்டு
கத்தி அழுதுவிட்டு தூங்கும்
தத்தி நடக்கும்
குழந்தையாய் - இன்று
அமைதியாய் என் மனம்

படும் போது தான்
தொடும் போது
சுடும் என்றறியும்
குழந்தையின் விரலாய்
வெந்திருக்கிறது என் இதயம்

தேனாய் இனிப்பாய் என்று
நானாய் நினைத்து
வீணாய் ஆசை வளர்த்து
உன்னால்
ஏமார்ந்தவன் நான்

கவலை மறந்து
குவலய இலையில் நின்று கத்தும்
தவளையாய் - உன் 
நினைவுகளோடு பிரியவேண்டும்
என் உயிர்

ஏ. எச். எம். றிழ்வான்

காதலை பிரசவி


காதலை பிரசவி

சுடர் ஏற்றாமல்
ஒளிரும்
மின் மினி போலவே
என் கவிதைகளும்
நீ
காதல் சொல்லாமலே
துளிர் விடுகிறது
என்னில்

காலை நேரமானால்

என்
படுக்கையறையில்
பட்டாம் பூச்சிகள்
நிரம்பி விடுகின்றன
உன்னைப் பற்றி
எழுதிய கவிதைகளை
படிக்க வேண்டுமாம்

உன்னால்

காதலில்
கைதியான
என்னை
விடுவிக்குமாறு
மனு எழுதுகிறேன்
என்
கவிதைகளால்

செருப்புக்

கடைக்காரன்
முன்னேரினான்
நாள் தோரும்
நான்
உன் பின்னே
வீணாய்
அலைந்ததனால்

உனக்காக

கையை
வெட்டிக் கொண்டவன் நான்
இப்போது உணர்கிறேன்
இரத்தத்தை தானம்
செய்திருந்தால்
வாழ்ந்திருக்கும்
ஒரு உயிர்

உன் 

பார்வைகளைப் பற்றி
கேட்கவேண்டும்
என்னோடு
கதைக்க நேரமில்லாது
சென்றுவிடுகிறது
அவசரத்தில் 
மின்னல்


என்னை

கவர்ந்த
பனித்துளியும்
நீ தான்
என்னைக்
கவிழ்த்திய
பனிக்கட்டியும்
நீ தான்

உன்னை

கருக்கட்டிய
என்
கவிதைகளைப்
பார்த்தாவது
உன் 
காதலை
பிரசவி

ஏ. எச். எம். றிழ்வான்

இனியவளே...

இனியவளே...


பட்டாம் பூச்சிகளையும்
வண்டுகளையும்
சங்கிலியிட்டுக்
கட்டி வைத்திருக்கிறேன்
அவை உன்னைப் பற்றி
அடிக்கடி முணுமுணுப்பதனால்

கடலோரமாய் தன் போல்
காதல் சோடிகளை
பார்க்க வந்த கரையை
அழைத்துச் செல்ல முடியாது
தவிக்கிறது
அலை

உன் கோபத்தால்
என் தோப்புக்கு
வேலியமைத்திருக்கிறேன்
இப்போது வண்டுகளும் வருவதில்லை
எனக்கு சொந்தமான பூக்களில்
தேன் குடிக்க

மேகக் காகிதங்களை தேடிப்பிடித்து
தூரிகை கொண்டு
வானவில் தொட்டு
உன் பெயரை மட்டுமே எழுதினேன்
கானாமல் போய்விட்டது
வானவில்

என் உயிரை
எடுத்துக்கொள் பகரமாய்
ஒவ்வொரு நாளும்
ஒரு தேனீர் கரண்டி
முத்தம் தா
பருகிக்கொள்கிறேன்

நீ
ஒவ்வொரு நாளும்
அழகாகி
என்
கவிதைகளை
அழகாக்குகிறாய்

உன்னைப்
பற்றித்தான்
கவிதை எழுதுகிறேன்
உன் மூச்சுக் காற்றின்
உஷ்ணத்தால் ஒரு
தேனீர் கொண்டுவா

ஏ. எச். எம். றிழ்வான்

14.4.15

என் விழியின் வலி

என் விழியின் வலி


உன் மேல்
என் பார்வைகள்
பட்டதால்
என் கண்கள்
கண்ணீர்
சொட்டுகின்றன


கண்களால்

வரையப்பட்ட
உன்
விம்பத்தை
கண்ணீர் கொண்டு
அழிக்க வைக்கிறாய்


தண்ணீருக்கு

பஞ்சமாகும்
வரட்சியான
தருணங்களிலும்
என் கண்ணீருக்கு மட்டும்
பஞ்சமில்லை


விரல்கள் கிழியும் வரை

வாசிக்கப்படும் வயலின் போல்
கண்ணீர்த் துளிகள்
சொட்டும் வரை
எழுதப்படுகின்றன
என் கவிதைகள்


உன் காதல் 

வலி தந்த
கண்ணீர்த்துளிகளை
பார்க்க வேண்டுமா
என் கவிதைகளை
படி


உன் காதல்

நிஜமானால்
நான்
சேகரித்துவைத்த
மயிலிறகுகளும்
முளைத்து விடும்


தூக்குக் கயிறு , ஆழ்கடல்

மலையுச்சி
நச்சு போத்தல்
துப்பாக்கி ரவை இவற்றோடு
எப்போது பேசும்
உன் மௌனம்

ஏ. எச். எம். றிழ்வான்


நொறுங்கிய இதயம் ...

நொறுங்கிய இதயம் ...

என் இதயம் என்ன
சேனைப் பயிர்ச் செய்கை நிலமா
காதலை பயிர் செய்த பின்
அப்படியே விட்டுச் செல்ல


வெள்ளத்தில் வெறிச்சோடிய
அறுவடை நிலமாய்
சகதியாகவே இருக்கிறது
இன்று என் மனம்


ஏணி உடைந்த
மரக்குடில் போல இருக்கிறது
என் காதல்
ஏறிய பின் இறங்க முடியாமல்


வெடித்துச் சிதறிய
இலவம் பஞ்சாய்
சிதறிக்கிடக்கிறது என் மனம்
உன் பொய்யான வார்த்தைகளால்


இடையிலே
அறுந்து போனது என் காதல்
பூக்கும் முன் பறிக்கப்படும்
பூவாய்


புத்திமான் பலவான் கதை
பூதமாக மீண்டும் மீண்டும்
ஏமார்ந்து போகிறேன்
உன்னிடத்தில் நான்


தொப்பென்று விழுந்த
பனை மரத்தடி பழமாக
இன்று என் மனசு
வலிகள் நிறைந்து


காளானாய் பூத்து
ஈசல்களாய் பறந்து விட்டது
என் மேல் வைத்த
உன் காதல்


புற்றாகவே இருக்கிறேன்
மீண்டும் நீ வருவாய்
மலர்வாய்
சிறகடிப்பாய் என்று

ஏ. எச். எம். றிழ்வான்

நான் நானாக இருக்கிறேன் ..

நான் நானாக இருக்கிறேன் ..


சுமை தாங்க முடியாத 
ஊமைக் காதலில் - என் 
இமை சிந்திய கண்ணீரை 
மையாக்கி எழுதுகிறேன் 


சத்தமில்லாமல் 
ரத்தமில்லாமல் நடக்கிறது 
யுத்தம் என்னுள் - உன் 
முத்தங்களை நினைக்கும் போது 


தெரியாமல் தொடங்கிய – யாரும் 
அறியாமல் வளர்ந்து இன்று 
பிரிந்து கிடக்கிறது 
புரியாத புதிராய் என் காதல் 


முடித்து வைத்த உன் நினைவுகள் 
வெடித்துச் சிதறிய பின் 
துடிக்க முடியாதென்று வேகமாகவே
அடிக்கிறது என் இதயம் 


கூடி வாழவென்று
நாடி வந்த என்னில் 
தேளாய் கொட்டி 
வேலாய் ஏன் பாய்ந்தாய் 


கனாக்களிலே வந்து – பல
வினாக்களை என்னில் தொடுத்து
காணாமல் போனவள் நீ - இனி
நானாகவே இருக்கிறேன் நான்


ஏ. எச். எம். றிழ்வான்

வெந்து போன என் மனசு ...

வெந்து போன என் மனசு ...

தோப்பினிலே
பூப் பறிக்கும்
பூப்படைந்த பூ உன்னை
யாப்பறிந்து
பாப்புனைந்தேன்

வெள்ளை நிறத்து
முல்லை மலரிலே
கறுப்பு நிறத்தில்
ஒரு வண்டாய் - உன்
கண்கள்

சாலையோர
சோலையிலே
பறித்து வைத்த ரோஜாவாய்
சிரிக்கிறது - உன்
இதழ்கள்

நித்தம் நான் உன்னும்
ஈத்தம் பழத்தோடு
ரவை கொண்டு
சுவையாக செய்த லட்டாய் - உன்
கன்னம்

சாத்திரக் காரனாக்கி - என்னை
காத்திருக்க வைத்திருக்கிறது நான்
பிடித்துவிடத்
துடிக்கின்ற - உன் 
கைகள்


வத்திக் குச்சியால்
பத்தவைத்த ஜோதி போல்
துளிர் விட்டு
ஒளிர்கிறது - உன் 
கம்மல்

நித்திரை கெடுக்கும் - உன்
மாத்திரைக் கண்கள் மேல்
சித்திரை நிலவின் பாதி
முத்திரையாய் - உன்
நெற்றி

பஞ்சமில்லா புன்னகையை
வஞ்சமில்லாது
நெஞ்சுதிர்த்த நீ இன்றதில்
கஞ்சம் செய்து என்னை
கொல்கிறாய்

அந்தர் வந்தால்
சந்து வீட்டில் தொங்கும்
லந்தரில் பட்ட பூச்சாக
வெந்திருக்கிறது - உன்னால்
என் மனசு

ஏ. எச். எம். றிழ்வான்

மருந்தாகும் உன் முத்தம் ...

மருந்தாகும் உன் முத்தம் ...


எதைப் பூசினாலும்
குறையாது உன் முகப்பருக்கள்-அவை
பருக்கள் அல்ல
பதுக்கல்
நீ எனக்குத் தராத முத்தங்கள்


உன் முகப் பூச்சுக்களுக்கு விலை
என் கெஞ்சல்கள் தான்
ஒவ்வொரு கெஞ்சலுக்கும்
ஒவ்வொரு முத்தம் தந்துவிடு
குறைந்து விடும் உன் முகப்பருக்கள்


கண்ணாடியைப் பார்-நீ
தரவேண்டிய முத்தங்கள்
எத்தனை என புரியும்
முத்தங்களை தந்து பார்-உன்
முகப்பருக்கள்
அடையாளமில்லாமல் மறையும்


உன் முகப்பருக்களை
அதிகம் விரும்புகிறேன்
அவை எனக்கு நீ தர வேண்டிய
கடன் என்பதால்


உன் கடன்கள்
அதிகரிப்பதையே விரும்புகிறேன்-நீ
எனக்குத் தரவேண்டிய
முத்தங்களும் அதிகரிப்பதனால்


இனியும் முக அலங்காரத்துக்கு
நேரம் ஒதுக்காதே
முத்தமிட மட்டும் நேரமொதுக்கு
அது உன் முக அலங்காரத்துக்கான நேரம் தான்


நீ அடக்கி வைத்த ஆசை தான்
முகப்பருக்கல்-அது
முகப்பூச்சுக்களால் மறைந்திடாது
உன் முத்தங்கள் தான் மருந்து


என் போர்வைக்குள்-உன்
முத்தங்களை
மொத்தமாக கொண்டு வா-உன்
பருக்கல் மறைந்து விடும்


உன் முத்தங்களின் பதுக்கல் தான்
உன் முகப்பருக்களின் வடுக்கல்

ஏ. எச். எம். றிழ்வான்

என் கல்லறையின் கிறுக்கல் ...


என் கல்லறையின் கிறுக்கல் ...

செத்தல் மிளகாய்
இதழ்களிலே
நச்சுத்தடவியா
முத்தமிட்டாய்


மென் கம்பி
விரல்களிலே
மின் தடவியா-என்னை
தொட்டாய்


துப்பாக்கி ரவை
கண்களாலே
ஏனடி நீ என்னை
சுட்டாய்


நச்சுத் திரவியமா-நீ
என் மீது சிந்திய
பொய்யான 
புன்னகைகள்


கத்திக் கண்களால்
குத்திக் கிழித்தாய்
என்னில்-உன்
நினைவுகளை


என்னைக் கொள்ளும்
ஆயுதங்களை வைத்திருக்கும்
களஞ்சியமா நீயும்-உன்
இதயமும்


காதல் கைதியாய்
சிறைப்பிடித்து
மரணதண்டணை நீ விதித்து
உயிரோடு ஏன் புதைத்தாய்


ஏ. எச். எம். றிழ்வான்

காதலின் வலி ....

காதலின் வலி ....

நானாக நான் இருக்க 
தேனாக மொழி பேசி என்
பேனாவால் கவிதைகளை 
தானாக விதைத்தவள் நீ


பித்தனாய் அலைந்தேன் 
புத்தியை இழந்தேன்
அத்தனையும் பறித்த பின் 
புத்தி நான் தெளிந்தேன் 


இத்தனை நாளாய் எம்மில் 
எத்தனை சில்மிஷங்கள் 
அத்தனையும் மறந்துவிட்டு
மொத்தமாய் நீ மாறிவிட்டாய் 


தென்றலாய் தீண்டி விட்டு
புயலாய் தாக்குகிறாய் 
நிழலாய் இருந்து விட்டு
தழலாய் சுடுகின்றாய் 


ஈரமாய் பேசிய நீ
பாரமாய் மாறியதேன் 
தாரமாய் நினைத்திருந்தேன்
தூரமாய் சென்றுவிட்டாய் 


அழகில்லாதவன் - என்னை
அழகாக்கியது உன் காதல் ஏன்
விலகுகிறாய் 
பழகிய நினைவுகளை மறந்தவளாய்


கனியாத உன் காதல் - யானையுண்ட 
கனியாகவே இருக்கிறது
போலிகளால் புனையப்பட்டு
வலிகளால் நிரம்பியதாய் 


சுடாத பாத்திரமாய் 
விடாது கசிகிறது என் 
கண்களில் 
கண்ணீர் உன்னையே நினைத்து


ஏ. எச். எம். றிழ்வான்

காத்திருக்கிறேன் காதலுடன் ...

காத்திருக்கிறேன் காதலுடன் ...

குட்டிப் பூனையாய்
எட்டு வைக்கிறேன் மெல்ல
எட்டி விடலாமென்று - உன்
அன்பை

கொட்டும் மழையை அறியாது
பட்டம் கட்டும் சிறுவனாய்
பூட்டி வைக்கிறேன்-உன்
நினைவுகளை

விட்டுப் போனபின்
ஒட்டுப் போட வைத்திருக்கும்
பட்டு வேட்டியாய்-என்
இதயம்

கட்டுக் கட்டாய்
வெட்டி வைத்திருக்கும் கரும்பில்
சொட்டும் வெல்லமாய்-என்
உயிர்

எட்டாத தூரத்திலே
வட்டமிட்டு சுற்றித்திரிந்து
நோட்டமிடுகின்றேன் பருந்தாய்-நான்
உன்னை



தட்டு நிறைய குங்குமத்தோடு
வட்டப் பொட்டு வைத்து
மெட்டியிட காத்திருக்கிறேன்-என்
உண்மைக் காதலுடன்

ஏ. எச். எம். றிழ்வான்

என் உள்ளத்தில் முள் தைத்தவள் நீ

என் உள்ளத்தில் முள் தைத்தவள் நீ

தள்ளித் தள்ளி சென்றாலும்
மெல்ல மெல்லமாய் என் மனதை
கிள்ளி எடுத்த
கள்ளி நீ

உள்ளத்திலே
கள்ளம் கொண்டு
குள்ளமாய் நீ பழகி
இல்லை இனி காதல் என்றாய்

வில்லத்தனத்தை
உள்ளே வைத்து
கல்லான உன் மனதால்
தொல்லை கொடுத்தவள் நீ

ஒல்லியான உன்னிடத்தில்
தள்ளியே நிற்கின்றேன்-என் காதலுக்கு
புள்ளி வைத்து உயிரோடு
கொள்ளி வைத்ததனால்

பள்ளம் பாயும்
வெள்ளத்தில் ஓடும்
வள்ளமாய்-இன்று என்
உள்ளம்

ஏ. எச். எம். றிழ்வான்

13.4.15

நீயும் என் நினைவுகளும் ....

நீயும் என் நினைவுகளும் ....

விழிகள் எனும்
உளிகள் கொண்டு உன்னை
செதுக்கியதால்-என்
இதயமும் ஒரு
சித்திரக்குன்றம் தான்

தாள் தாளாய் எழுதி
நூல் நூலாய் கோர்த்து
யாழ் தேவியின் பெட்டிகள் போல்
அடுக்கி வைத்திருக்கின்றேன்
உன்னைப் பற்றி எழுதிய -என்
கவிதைப் புத்தகங்களை

அடிக்கடி உன் நினைவுகள்
புதுப்பிக்கப்படுகின்றன
துறை முகங்களில்
தங்கிச் செல்லும்
கப்பல்கள் போல்

நீ பிரிந்த பின்பு
வரட்சியால்
வெடித்துப் பிளவுற்ற
பூமி போலவே இருக்கிறது
என் இதயம்
மீண்டும் இணைய முடியாமல்


காணாமல் போனவிமானத்தின்
கறுப்புப்பெட்டி போல்
பரிசோதிக்கிறேன்
என் இதயத்தை
நீ என்னை விட்டுச்செல்ல
காரணம் என்னவென்று

வேரினூடே நீர் உறிஞ்சும்
தென்னை போல
எட்டா உயரத்தில் நீயும்
உன்னில் என் நினைவுகளும்

ஏ. எச். எம். றிழ்வான்

உன் மௌனம் ....

உன் மௌனம் ....

துடிக்கும் இதயத்தில் இடம் 
பிடித்தவளுக்காய் தமிழை 
வடித்து எழுதிய 
என் கவிதை 

குளிர் காலத் 
தளிர் மேலே
வெளிர் பனி உன்
முகப்பருக்கள் 

நெஞ்சம் கவர்ந்த
மஞ்சல் முகத்தில்
அஞ்சல் பெட்டி நிற 
உதடுகள் 

சத்தம் இன்றி
சுத்தித் திரியும் 
நத்தையாய் உன் 
பாதங்கள் 

அன்ன நிறத்து 
கன்னத்திலே வண்டு
வண்ண 
மச்சம் 

கரும்பை தேடும்
எறும்பாய் நான் 
விரும்பும் உன்னை 
நோக்கிய என் பார்வைகள் 

நேசிக்கும் உன் 
சுவாசத்தை 
யாசிக்கும் என்னை
தண்டிக்கும் உன் மௌனம்

ஏ. எச். எம். றிழ்வான்

கண்ணீர்த் துளியானேன் ....

கண்ணீர்த் துளியானேன் ....

என்
சோகங்களை 
சுகங்களாக்கிய – நீ
இன்று 
நிஜங்களை 
நிழல்களாக்கியது ஏன்?


நீ 
என்னைப் பிரிந்த பின் 
தூக்கத்தையே அதிகம் விரும்புகிறேன் 
கனவிலாவது உன்னோடு
இனிமையாக 
வாழ வேண்டும் என்பதற்காய் 


என் 
தூய காதலை
புரிந்து கொண்டது
கண்கள் மட்டும் தான் 
பிரிந்த பின்பும்
அழுது கொண்டே இருக்கிறது


அருகருகே இருந்தும் 
தண்டவாளங்கள் கூட
காதலிக்க மறுக்கின்றன
ஒவ்வொரு நாளும் 
தன்மேல் இறந்து கிடக்கும்
காதலர்களைப் பார்த்து 


நிசப்த இரவுகளில் 
சந்திரன் பனிப்பூக்களைத் தூவ
கடற்கரையோர மெத்தையிலே
சாய்ந்திருந்து காதலித்த 
அந்த நாட்கள் 
நீங்காத நினைவுகளாய்


காதலிக்க முன்
தண்ணீர்த் துளியாய் இருந்த நான்
உன்னைக் காதலித்த பின் 
பன்னீர்த் துளியானேன் 
இன்று நீயோ என்னைப் பிரிய நான்
கண்ணீர்த் துளியானேன் 


V. vr;. vk;. wpo;thd;

என் உயிரே...!

என் உயிரே...!
மெல் இதழ்களும்
மெழுகுக் கன்னங்களும்
மைதீட்டிய கண்ணின்
மயக்கும் பார்வைகளும் - தாக்குதடி

வெட்கச் சிரிப்பு

வெகுளித் தனம்
வெள்ளித் தோடிட்ட காதுகள்
வெண் பற்கள் - ஈர்க்குதடி

எழில் கூந்தல்

எரிக்கும் கோபம்
எட்டா நிலா அழகு
எழில் முகம் - பிடிக்குதடி

விண் மீன் விழிகள்

விண் மழைமேக புருவம்
மரகதக் கையின்
மருதாணிச் சிவப்பு - மயக்குதடி

இளஞ் சிவப்பு

இதழ்களில்
இனிமையாக முத்தமிட
இதயம் மெல்லத் - துடிக்குதடி

கனவுகளைத் தந்துவிட்டு

களைந்து சென்றாயடி - என்
கற்பனைகள் சிறகொடிந்து
கண்ணீர் உற்றாய் - சிந்துதடி
ஏ. எச். எம். றிழ்வான்

என்னவளே ...

என்னவளே ...

உன் பிஞ்சுப் பாதங்களில்
பஞ்சு விரல்கள்
உன் பிஞ்சு மேனியின்
பஞ்ச வர்ணங்கள்

உன் பிஞ்சு இதழின் விசமற்ற
நஞ்சுத் துளிகள்
உன் பிஞ்சுக் கூந்தலின்
வஞ்சிக்கொடிகள்

உன் பிஞ்சுக் கன்னங்களில் - நான்
கொஞ்சும் சில நொடிகள்
உன்னை மெல்ல நெருங்கும் போது
தூரப் போகும் சிட்டுக்குருவிக்
கொளுசொலிக் கால்கள்
விட்டு விலகும் போது
என்னைத் தேடிச் சுழலும்
உன் இரு விழிகள்

பார்க்க மாட்டாயோ என ஏங்குகையில்
தலையில் யாரோ குற்றியது போல்
கடைசி நொடியில் பார்க்கும்
குளிர்ந்த, வளைந்த வானவில் போன்ற
புருவம் தூக்கி
எனைப் பார்க்கும் பார்வை


என் கண்களாகிய
ஜன்னல் ஊடாய் நுழைந்து
என் இதய அரை
கதவு திறந்து அனுமதியின்றி
உள்ளே செல்வதால்
நான் சில நொடிகள்
மௌனித்து எனை மறந்து
கனவுலகில் மிதந்து போகிறேன்
உயிரான என்னவளே...

ஏ.எச்.எம் றிழ்வான்

காத்திருந்தாலே காதல் சுகம் ...



காத்திருந்தாலே காதல் சுகம் ...

எம் காதல்
பூப்போல்
பூத்தது
புன்னகையோடு

சிட்டாய்
சிறகடிக்கிறது – என் மனத்தில்
சில்மிஷக்காரி – உன்
சிரிப்பு

உன்
நினைவுகளால்
நீடிக்கிறது 
நித்தம் என் ஆயுள்

முடித்துவைத்து – உன்
முத்தங்கள்
மொத்தம் வேண்டும்
எனக்கு

என் இதயம்
வேகமாய் துடிக்கிறது
உன் நினைவுகள் தந்த
அதிர்வுகளால்

நான் தேடும் போதெல்லாம்
ஓடி வருகிறாய் - நீ
என் நீடித்த
துயர் நீக்க

தீக்குச்சியாய் - நீ
தீண்டும் போது
தீப்பிடிக்குதடி
என் மேனி

குழந்தையாய் - உன்
குறும்புகள்
குடிகொண்டன யாவும்
என் நெஞ்சில்

காத்திருந்தால் தான்
காதல் சுகம்
காத்திருப்போம் நாம்
கைப்பிடிக்கும் காலம் வரை

@ ஏ.எச்.எம் றிழ்வான்